Tuesday, January 3, 2012

“எங்களை எழுப்பினால் நாங்கள் எங்கே போவம்”…?


‘‘எங்களை எழுப்பினா நாங்க எங்க போவம் என்னோட படிக்கிற பிள்ளைகளை எல்லாம் பிரிய வேணும் என்னம்மா’’ என்று தனது தாயிடம் சிணுங்குகிறாள் கொக்குவில் இராமகிருஷ்ணாவில் படிக்கும் மாணவியொருத்தி!

யாழ்ப்பாணத்திற்கு தண்ட வாளம் போடப்படப் போகிறது; ரயில் வரப் போகிறது. குடாநாட்டு மக்கள் எல்லாரும் சந்தோசக் கடலில் நீந்த தண்டவாளத்திற்கு அருகேயுள்ள குடியிருப்பாளர்கள்  துன்பத்தில் இருக்கின்றனர்.

புகையிரத நிலையத்தை அண்டிய குடியிருப்புக்கள்


இப்பாதிப்பினை யாழ் பல்கலைக்கழக புகையிரத வீதியில் இருக்கின்ற வாசிகளும் எதிர் கொண்டிருக்கின்றனர். முப்பது வருட காலமாக தொடர்ந்த யுத்தம் தண்டவாளங்களை புரட்டிப் போட்டிருக்கிறது மக்கள் வாழ்வையும் சேர்த்து!

ரயில் போக்குவரத்து முன்பு இடம்பெற்றதன் சாட்சியாக புகையிரத கைகாட்டியும்; (Hand signal) அழிவடைந்த புகையிரத நிலையமுமே தரிசனம். குடியிருப்புக்களால் நிறைந்து நிற்கிறது  வளாகவீதி.

சந்தை வியாபாரத்தை மட்டுமே நம்பியிருக்கின்றது எட்டுப் பேர் கொண்ட குடும்பம். ‘‘1997ஆம் ஆண்டில் மின்சார வசதி கிடைத்தது. ஆனால் தற்காலிகமாகத் தருகிறோம் எனச் சொல்லித் தான் தந்தார்கள். இப்ப எழும்பச் சொன்னால் எந்த வருமானத்தை நம்பி எழும்புவதாம்? எழும்பச் சொன்னதால வீட்டையும் பிடுங்கிப் போட்டம் பிடுங்கி ரெண்டு வருசமாய் இப்பிடியே கிடக்குது’’ என்கிறார் இங்கு வசிக்கும் விஜயகுமார்.

அளவிற்கதிகமான குடும்ப அங்கத்தவர்களையும் சலிக்காமல் சுமக்கிறது ஒரு அறை கூட இல்லாத மண்குடிசை. பெரும்பாலும் எல்லா வீடுகளும் ஒரே அமைப்பையே கொண்டவையே!  நான்கு தடி களால் அமைக்கப்பட்ட தறப்பாள் கொட்டில்கள். ஒவ்வாரு அடை மழைக்கும் தாக்குபிடிக்க முடியாமல் வீழ்ந்து கிடக்கின்றன.




                                                          அரைவாசி பிடுங்கப்பட்ட நிலையிலுள்ள குடிசை

அன்றாட வாழ்வைக் கொண்டு செல்வதற்கே ததிங்கிணத்தோம் போடுகிறது இவர்களது வாழ்வு! அதற்குள் வாழ்விடமே இல்லாத போராட்டம் கண் முன்னே சதிராடுகின்றது. இக்குடியிருப்புப் பகுதியில் 250 குடும்பங்கள் வசித்தன. தற்போது ஜம்பத்து மூன்று குடும்பங்களே வசிக்கின்றன. புகையிரத பாதை புனரமைப்பினால் இப்பகுதியை விட்டு வேறிடத்திற்கு சென்று விட்டன மற்றக் குடும்பங்கள். தண்டவாளக் குடியிருப்பு வாசியான நடுத்தர வயதுடைய ராணி நல்லையா இப் படிக் கூறுகின்றார். ‘‘இங்கு நாங்கள் வந்து பதின்மூன்று  வருடங்கள் ஆகிட்டுது. இப்ப எழு ம்பச் சொன்னால் என்ன செய்வது? எழும்பச் சொல்லி ரெண்டு வருசம் ஆயிட்டுது. அதுக்கிடையில் மூன்று கடிதங்களையும் அனுப்பிட்டாங்கள்.
புகையிரத பாதையில் குடியிருக்கும் ராணி நல்லையா

நாவற்குழியில் இடம் தாறம் என்டு சொன்னார்கள். அரசாங்கத்தில இருந்தும் ஆட்கள் வந்திச்சினம். கதைச்சிச்சினம். ஆனால் எந்த ஒரு முன்னேற்றமும் இதுவரைக்கும் இல்லை. நம்பிக்கை இல்லாம இருக்கு. எப்ப விடிவு கிடைக்குமோ. கட்டாயமாக வேற இடத்தில இடம் தராட்டி எழும்பவே மாட்டம்’’ எனும் போது முகத்தில் ஒரு ஏக்கம்!

 ‘‘எமக்கு வேறிடம் தருவதாக வெறும் பேச்சளவில் கூறுகிறார்களே தவிர இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக் கவில்லை. எவ்வி தமான வருமானமும் இல்லை. கணவனால் கைவிடப்பட்ட நிலை யில் சகோதரனுடன் வாழ்கிறேன்’’; என்றார் இரண்டு வயது வந்த பிள்ளைகளின் தாயான குடும்பப் பெண். விரக்த, சோகம், வெறுப்பு அவர் கண்களில் தெரிகிறது.
இக்குடியிருப்பை சூழ புதர்களும் பற்றைகளுமே நிறைந்து கிடக்கின்றன. பெரும்பாலான குடும்பங்களுக்கு பொதுவாக அமைக்கப்பட்டிருக்கிறது குழாய் நீர்ப்பம்பி.
பொதுவாக அமைக்கப்பட்டிருக்கும்  நீர்ப்பம்பி

நிவாரணம் கூட இல்லை; வெளிநாடுகளி;ல் உதவிக்கும் ஒருத் தரும் இல்லை. சத்தியசாயி சேவா நிலையத்தினர் தான் மாணவர்கள் படிப்பததற்காக ஏதேனும் உதவிகள் செய்கின்றனர்.

‘‘எமக்கென ஒரு சனசமூக நிலையம் இல்லை. எமக்கென ஒரு பிரதிநிதி  கூட இல்லை. இவ்வாறான நிலையில் நாம் எந்த மட்டத்தினருடனும் தொடர்பு கொண்டாலும் அது பரிசீலிக்கப்படுவதில்லை. எமக்காக யாராவது இருக்கின்றார்கள் என்ற நிம்மதி கூட இல்லை’’  என்கின்றனர்.

‘‘எங்களிற்கு நிலம் வழங்கினாலும் நாங்கள் மாற்று நிலத்தில் குடியேறுவது சிரமமாகவே இருக்கும். என்றாலும் என்ன செய்வதென்ற நிலமை! நிரந்தர இடம் இருந்தால் எந்த பாதிப்பு வந்தாலும் துணிச்சலாக அதை எதிர்கொள்ளலாம்’’  என்கின்றனர் இக்குடியிருப்புவாசிகள்.
வாழ்வதற்கு நிலமும் இல்லை; இருக்கின்ற  வீடும் அரைகுறையில் இருப்பதைப்  போலவே அவர்களது கோரிக்கைகளும் அநாதரவாய் கிடக்கின்றது.


நேரடி ரிப்போர்ட்
மு.கௌசிகா- யோ.தட்சா
கடிவாளம் 03

No comments:

Post a Comment