Tuesday, January 3, 2012

‘ஒளிச் சமிக்ஞைகள்’ அற்ற காப்பற் வீதிகளால் ஏற்படும் விபத்துக்கள்

‘‘நேரமாகிப் போய்ட்டுது இன்டைக்கு எப்படியும் ஒபீஸில் பேச்சுத் தான் கேட்கப் போறேன். உந்த பாழாய்ப் போன றோட்டும் ஒரே நெரிசல். உதுக்குளால போய் வாறதை நினைக்கேக்கை..’’  பெரும்பாலான வீடுகளில் காலை வேளையில் இப்படித் தான் முணுமுணுப்பு!
    
அவசர பணிக்குப் போகிறவர்களுக்கும் சரி பள்ளி செல்லும் மாணவர்களுக்கும் சரி பெருத்த தலையிடியாக இருக்கிறது இந்த போக்குவரத்து நெரிசல்!    


வர்த்தக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் பாரிய வாகனங்களாலும் இட நெருக்கடி ஏற்பட்டு போக்குவரத்து சீரின்மை ஏற்படுகிறது. இப்போது பிரதான வீதிகளில் பொலிசார் நடமாட்டத்தை காணக் கூடியதாக இருக்கிறது. சில வீதிகளிலேயே பணியில் இருக்கின்றனர். போக்குவரத்து பொலிசார்  கடமையில் இல்லாத வேளைகளிலே வாகன சாரதிகளும் பொது மக்க ளும் பெருத்த அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.  

தற்போது  பிரதான வீதிகள் சில புனர்நிர்மானம் செய்யப்பட்டு வருகின்றது. யாழ் மாவட்டத்தில் முக்கியமான பெருந் தெருக்கள் காப்பற் வீதியாக மாற்றப்பட்டு வருகின் றன. வாகன சாரதிகள் காப்பற் வீதியில் ஏதோ விமானத்தில் பறப்பது போன்றதான உணர்வில் மிதக்கின்றார்கள். அதன் விளைவு விபத்து தான்.    

காப்பற் வீதிகளில் செல்லும் போது வேகத்தை கட்டுப்படுத்திச் செல்ல வேண்டும். அப்போது தான் எந்தவித ஆபத்துக்களும் இடம்பெறாது தடுக்கலாம். காப்பற் வீதிகளிலேயே போக்குவரத்துப் பொலிசாரும் ஒளிச்சமிக்ஞைகளும் தேவைப்படுகிறது. காப்பற் வீதிகளில் வேகத் தடையையும் ஏற்படுத்த வேண்டும்.
 
ஓளிச் சமிக்ஞைகள் அல்லாத குடாநாட்டு வீதிகள் வாகன நெரிசல்களையும் விபத்துக்களையுமே ஏற்படுத்துவதில் பங்குவகிக்கிறன. இதனை சீர் செய்ய ஒளிச் சமிக்ஞைகள் பிரதான சந்திகளில் பொருத்தப்பட வேண்டும்.  
  
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.நந்தகுமாரன் விபத்துக்கள் அதிகரிப்புத் தொடர்பாக கூறுகையில் ‘‘காப்பற் வீதி நிறுவப்பட்ட பின்னரும் வீதி விபத்துக்களால் எமது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. சில நாள் இடைவெளியில் வீதி விபத்துக்களில் சிக்கி உயிரிழப்போர் தொகை அதிகமாக உள்ளது என்கிறார்.   
               
யாழ். நகர வீதிகள் காப்பற் தரத்தை அடைந்தாலும் ஒளிச் சமிக்ஞைகள் அற்ற வீதியாகவே காணப்படுகிறது. இதனால் விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணமே இருக்கின்றன.     தற்போதைய வீதி நிலைமை மக்களது உயிர்களை பந்தாடும் நிலையிலேயே காணப்படுகிறது.  வாகன ஓட்டுநர்களும் இதனைக் கவனத்தில் எடுத்து செயற்படுவார் களாயின் அவர்களுக்கும் மற்றைய வாகனங்களுக்கும் பாதசாரிகளுக்கும் நன்மையளிக்க முடியும். உயிர்களின் பெறுமதியை அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும்.
கடிவாளம்-03 மு.கௌசிகா

No comments:

Post a Comment