செல்வக் கதையோலை

வெள்ளத்திற்கு ஆசை வந்த போது...


வெள்ளத்திற்கு ஆசை வந்து விட்டது. அணை போட முடியாத ஆவல் அதற்கு! மனிதன் கால் தடங்கள் பதிந்த வீதிகளில் எல்லாம் தன் உடல் உராய வேண்டுமென்று. மனிதனின் ஆசையை அஸ்திவாரம் போட்டுத் தடுக்க முயலலாம். ஆனால் இயற்கையின் கொண்டாட்டத்திற்கு போடத் தான் முடியுமா தடை? தன்னைப் பார்த்து மனிதர் போற்றியது போதாதாம். வீதிகளில் தவழ்ந்தால் அவர்கள் தன்னைப் பார்த்து குதூகலிப்பார்கள் என நினைத்துக் கொண்டு அவர்களுடைய தூற்றல் பாவினையே தவமாய் கேட்டு விட்டது.

ஊரெல்லாம் தவழ்ந்து சின்னஞ் சிறுசுகளுடன் விளையாடி களித்துக் களைப்போம் என்று வந்திருந்த வெள்ளத்திற்கு ஒரே ஷாக்! யாருடன் தான் விளையாடலாம் என எண்ணி வந்திருந்த அதற்கு அவர்கள் யாருமே கண்ணுக்குத் தெரியவில்லை. தன் மேலே ஏறி மிதித்துப் போனவர்களை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றது. தான் தேடி வந்த சிறுவர்களை காணோம் என்ற ஏக்கம் ஒருபுறம்; தன்னை மிதித்து மதிக்காமல் போன மனிதர்களை ஏதாவது செய்ய வேண்டுமென்ற வெறி மறுபுறம். இப்படியான வெறி கொண்டு தன் சகாக்களையும் உறவினரையும் கூவியழைத்து தனக்கு துணை தேடிக் கொண்டது.

வெள்ளத்திற்கு மனிதன் தன்னை ஒரு பொருட்டாகவே பார்க்கவில்லை என்ற கோபத்தில் தன்னுடைய உறவுகளை எல்லாம் ஒருங்கே திரட்டி கும்மாளம் கொட்டிக் கொண்டிருந்தது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது எங்கும். எங்குமே கூக்குரல்கள்;கூச்சல்கள். தான் செய்த ஆர்ப்பாட்டத்தில் அதற்கே ஒழுங்காக கேட்கவில்லை எதுவும். என்ன சொல்வார்கள்! என்னைத் திட்டித் தீர்ப்பார்கள் அவ்வளவு தானே? இவர்களின் திமிருக்கு பழிவாங்கத் தானே இவ்வளவும். ஆனால் என்னிடம் வந்து விளையாடும் வாண்டுகளைத் தான் காணோம். இந்தப் பெரிய முட்டாள்கள் தான் வேணுமென்றே மறைத்து வைத்திருக்கிறார்களோ என்னவோ! என்ன இருந்தாலும் குட்டிகளுடன் விளையாடி விட்டுத் தான் போவேன். அவர்களின் அழகுக்கண்கள் என்னை இப்படிப் பார்த்தவுடன் விரியும் அழகை பார்க்காமல் போக மாட்டேன். பின்னே இருக்காதா? தினமும் குளத்துத் தண்ணீருக்குள் பார்த்துப் பார்த்து ரசித்தவர்கள் இப்படி தங்கள் வீடுகளைத் தேடி வந்திருக்கிறேன் என்றால் கசக்கவா செய்யும்...எங்கே அவர்கள்' என ஒவ்வொரு இடமாய் குதித்துக் குதித்து தேடியலைந்தது. இது செய்த விளையாட்டால் மனிதர்களின் அவலக் குரல்கள் பேரிரைச்சலாக வந்து கொண்டிருந்தன.

ஒருவேளை அங்கே போயிருப்பார்களோ இங்கே போயிருப்பார்களோ என சிறார்கள் தன்னிடம் வரும் போதெல்லாம் கதைத்த இடங்களை நினைவிற்கு கொண்டு வந்தபடி, ஒவ்வொரு இடமாய் தேடப் போனது. தான் எடுத்திருக்கும் அவதாரத்தை அவர்களுக்கு காட்டி விட ஒரே ஆசை வெள்ளத்திற்கு! அந்தச் சிறுவர் குழாம் விளையாடும் திடலுக்கு முதலில் போனது. பச்சைக் காடாய் படர்ந்திருந்த அந்த மைதானம் வெள்ளக் காடாய் நிரம்பியிருந்தது. தன் அழகை ரசித்தபடி அவர்கள் மாங்காய் களவாடிச் சாப்பிடும் மாஞ்சோலைக்குள் புகுந்தது. அங்கே சோலையைக் கண்ட வெள்ளக்காடு திகைத்து நின்றது. மாஞ்சோலையில் ஆங்காங்கே மாமரங்கள் தலைகீழாக காட்சியளித்துக் கொண்டிருந்தன. தன்னால் தானோ என்ற ஐயம் வந்து விட்டது அதற்கு! சீச்சீ இருக்காது யாரோ தறித்திருப்பார்கள்...அப்படித் தான் இருக்கும் என தனக்குள்ளேயே பேசிக் கொண்டு அடுத்த இடம் தேடிப் போனது.

தென்னைப்பரப்புகள்...இங்கே தான் நம் நண்பர்கள் இளநீர் பறித்துக் குடிப்பார்கள் என்றார்களே போய்ப் பார்ப்போம். நெடுஞ்சாண் போன்ற தோற்றமுடைய தென்னைகள் எப்போது வீழ்வோமோ என்ற அச்சத்தில் ஆடிக் கொண்டிருந்தன. இங்கும் இல்லை. தெருமுனையில் கூட்டம் போட்டு கூத்தடித்துக் கொண்டிருப்பார்களோ...!என்ன இவர்கள் எனக்கு ஆட்டங் காட்டுகிறார்கள். வேறெங்கு தேடுவதாம்... பாடசாலை...அங்கு போய் பார்ப்போம் என நினைத்துக் கொண்டு வீதியில் தான் விளைவித்த நஷ்டங்களை எல்லாம் இஷ்டமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு போனது.

அந்த ஊரின் ஓலைக்குடில்களையும் மண்சுவர்களையும் தனக்குள்ளே கரைத்தபடி மிதந்து வரும் குடிசைகளை நினைத்துக் கொண்டவாறு மிதந்து மிதந்து சென்றது. எத்தனை கதைகள் சொல்ல வேண்டிக்கிடக்கு எங்கு போய்த் தொலைந்தார்கள். நேரம் செல்லச் செல்ல மனம் சலித்துப் போனது அதற்கு. கீழே என்னோட ஏதோ வருகுது போல என்னவாயிருக்கும் என்று குனிந்து தன்னைப் பார்த்த அதற்கு அதிர்ச்சி. தன்னிடம் செல்லப்பிள்ளை என்று பெயர் வாங்கிய தமிழ்க்குட்டி மூர்ச்சையாகிக் கிடந்தாள். தமிழ்... இறந்து போட்டாளோ என கலங்கியபடி, அவளை தள்ளிக் கொண்டு போய் தென்னங்குற்றியின் மேல் கிடத்தியது. குற்றியினடியில், செல்வனும் ராகவனும் கையைப் பிடித்தபடி அசையாது கிடந்தனர். அவர்கள் எப்போதும் இப்படித் தான்; இணைபிரியாத் தோழர்கள்... வெள்ளத்திற்கும் தலை சுற்றிப் போனது. தன் நண்பர்களின் கதி அதனை கதி கலங்க வைத்தது. மற்றவர்களும் இவர்கள் மாதிரித் தானோ.. எண்ணியவாறு அவர்களை விட்டு விட்டு ஏனையோரை தேடிப் பறந்தது.

வெள்ளத்தின் நட்பு வட்டம் பெரியது. ஏனெனில் ஊரின் எல்லா வாண்டுகளும் அந்த பெரிய கனகராயன் குளத்தையே தேடிக் கொட்டமடிக்கும். தன்னுடைய அதீத பேராசையால் அவர்களையெல்லாம் இழந்து விட்டோமோ என்ற துக்கம் அதனை நாடிச் சென்றது. துக்கம் நெஞ்சையடைக்க பள்ளிக்குச் சென்று பார்த்தது தன் ஆசையை தூரத்தே தள்ளி விட்டு. ஆமாம். மழையின் வருகையும் நின்று போனது.
வெள்ளப்பெருக்கின் ஓட்டம் சிறிதும் வடியவில்லை. அங்கு பள்ளியில் முழங்காலுக்கு மேலே தண்ணி தான் குடிகொண்டிருந்தது. ஊரின் எல்லா உறவுகளும் பள்ளியில் தான் தஞ்சம் புகுந்திருந்தன. உள்ளே போக மனமில்லாது தூரத்தே நின்று எட்டிப் பார்த்தது தன் நண்பர்களை. பெரும்பாலும் அங்கே அழுகைச் சத்தம் தான் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தது.

'எல்லாம் உன்னால தான் எங்களுக்கு நீ வேண்டாம் போய் விடு... எங்களை விட்டிட்டு போய் உன்ர இடத்திலேயே இரு. எங்களிட்ட வந்திடாதே' என்றபடி அர்ச்சனா அழுது கொண்டிருந்தாள். அந்த வெள்ளத்தின் மேல் அப்படிக் கோபம். அவளுடைய பக்கத்து வீட்டுத் தோழி சாரஸி நீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதை நேரில் கண்டவள் அவள்.வெள்ளத்திற்கு தன் கண்ணீரால் கோபார்ச்சனைகளை வீசிக் கொண்டிருந்தாள் அர்ச்சனா. இவள் போல இன்னும் எத்தனை எத்தனை பேரோ. கடவுளே என்னை மன்னித்துவிடு. மன்னிப்புக் கேட்கிறதுக்கு கூட தகுதியில்லை எனக்கு. நீ தந்த வேலையை மட்டும் செய்து கொண்டு இருந்திருந்தால் இப்படி எல்லோருடைய வசைகளையும் கேட்க வேண்டி வந்திராது. ஒரு சின்னக் குழந்தை என்னை வெறுக்கிற மாதிரி என்ர ஆசை பேராசையாயிட்டுதே. என்ன செய்வேன் என் கடவுளே...வெள்ளமும் கண்ணீர் வடித்தது. கண்ணீருடன் தண்ணீருக்குள் மிதந்து தன் பிழையை சரி செய்வதற்காய் அக்னிபகவானை தேடிச் சென்றது.