செல்வ மஞ்சரி

தமிழ்ப் பெண்கள் உண்மையில் விடுதலை பெற்றுள்ளார்களா?


பெண்கள் நம் நாட்டின் கண்கள் என உலக நாடுகள் யாவும் கூறுவது நிஜமே அவ்வுண்மை வெறும் வார்த்தை ஜாலங்களுடனும் கடதாசிப் பக்கங்களுடனும் நின்று விடுகின்றது. பெண்கள் விடுதலை பெற வேண்டும் என்ற குரல் எங்கும் பரவலாக ஓங்கி ஒலித்து வருகிறது. பெண்ணியத்திற்கு எங்கு பார்த்தாலும் பிரச்சினையே அதை தமிழ் மகளிர் என்றுமே சிறப்பான கண்ணோட்டத்துடன் ஒப்புநோக்குகையில் என்றுமே விஸ்வரூப பிரச்சினையாகவே உருவெடுத்து நிற்கின்றது.

உலகம் தோன்றிய காலத்திலேயே பெண்ணுக்கு பாதுகாப்பு பிரச்சினை ஆரம்பமாகியது.
அன்று தொட்டு இன்று வரை பெண்ணுக்கு பிரச்சினைகள் புயல் வேகத்தில் முயல் பாய்ச்சல் பாய்ந்து வருகிறது. பிறக்கின்ற மகவு பெண் எனில் வீட்டுப் பெரியவர்களின் முகம் சுருங்கி விடுகின்ற தன்மையானது ஆதி தொட்டு இற்றை வரை தொடருகின்றது. அதனூடாக தாயும் சேயும் ஒதுக்கப்பட்டு விடும் நிலை தமிழ்ச் சமூங்களிலே இன்றைய நவீன யுகத்திலும் கூட இருந்து வருகின்றது எனக் கூறுவதே வருத்தத்திற்குரிய விடயமாகும்..

தமிழர் சமுதாயத்தில் சேலை கட்டிய பெண்ணை நம்பாதீர் என்றொரு பழமொழி கூறப்படுகின்றது. சேலையானது பெண்ணின் முழு அங்கங்களையும் மறைக்கக் கூடிய தேசிய உடை. அதைவிடுத்து அவள் சேலை சுற்றினால் இப்படியொரு வம்பை அளப்பார்கள். இந்த ரகத்தினர் இருக்கும் வரைக்கும் பெண்ணுக்கு எப்படி விடுதலை கிடைக்கும்? விடுதலையுணர்வு என்பது வெறும் சொற்பிரயோகம் மட்டுமன்றி நடையுடை பாவனைகளிலுமே தேங்கி நிற்கிறது. ஓவ்வொரு பெண்ணுமே தமது ஆடை விசயத்தில் கட்டுப்பாடுடையவராகவே இருப்பர். மேலோங்குகின்ற மேலைநாட்டுக் கலாச்சாரம் சிலவற்றில் ஓங்கி வளர வேண்டுமே ஒழிய அது நம் கலாச்சாரத்தினை பாதிப்புற வைக்கும் போது அத்தளையை நீக்கிவிட வேண்டும். அதுவே அனைத்து மாதர்களுக்கும் ஊன்றுசக்தியாகும்.

மகளிருக்கும் அனைத்திலும் சமஉரிமை சமபங்கு வேண்டும் என அனைவராலும் கூறப்படுவது தான். லெ;வம் சேமம் கல்வி போன்றவற்றைப் போலவே கற்பும் சமபங்காகவே தரப்பட வேண்டும். நம் தமிழ்ச் சமூகத்தில் எந்தப் பெண் அடிமையுணர்வுடன் இருக்கிறாளோ அவள் தான் கற்பில் சிறந்தவள் என ஊரார் அழைப்பர். நளாயினி எனும் தமிழ் மாது குட்டம் பிடித்த தன் கணவனை தாசி வீட்டுக்கு கூடையில் சுமந்து சென்ற அச்செயல் சிறந்த கற்பின் வெளிப்பாடு எனக் கூறுகின்றனர். தங்கள் தவறுகளை மறைத்துக் கொள்வதற்கும் பெண்ணுக்கு விடுதலை பற்றிய விழிப்புணர்ச்சி வராமல் தடுப்பதற்கும் கற்பு என்பது துருப்புச்சீட்டாக பயன்படுத்தப்படுகின்றது. இதனால் வெகுண்டெழுந்த பாரதியார் கற்பென்று சொல்ல வந்தால் இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம் என்று முழங்கினார். இன்றைய காலகட்டத்திலும் இப்படிச் சொல்லியே பெண்களை அடிமைச் சங்கிலி போட்டு பாதுகாக்கின்றனர்.

பெண்ணை எந்தளவிற்கு ஏளனம் செய்து அடிமைத்தளை போட முடியுமோ அந்தளவிற்கு நளினம் செய்து விடுகின்றனர் விபச்சாரம் செய்யும் பெண்ணை விபச்சாரி என்று பழிதூற்றுகின்ற சமூகம் அதே தவறு செய்கின்ற ஆணை விபச்சாரன் எனக் கூறாமல் அதனை ஆண்மை என்று போற்றுகின்றது. பெண் செய்கின்ற தவறுகள் ஊருக்குத் தெரியும்; விதமாகவும் ஆண் செய்யும் குற்றங்கள் வெளியே தெரியாத வண்ணமாகவும் இறைவன் படைத்து விட்டிருக்கின்றான். இச்சாதக நிலமை ஆண்வர்க்கத்திற்கு பெண் வர்க்கத்தினரை எள்ளி நகையாடுவதற்குரிய போகப் பொருளாக ஆக்கிவிட்டது. விபச்சாரத்தை ஒழிக்க வேண்டுமாயின் காதல்மணம் விதவைமணம் சமஉரிமை போன்றவை எம் சமூகத்தில் ஏற்கப்பட வேண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். இவை தமிழர் பரந்து வாழ்கின்ற நாடுகளில் காணப்பட்டபோதிலும் தமிழ் சமூகத்தில் இன்றும் ஏற்கப்படாத நிலையையே காணக்கூடியதாக உள்ளது.

சமுதாயத்தின் இருவிழிகள் தான் பெண்ணும் ஆணும். ஒரு கண் தேவையில்லை என்று குத்திவிட்டால் அந்தளவில் பாதிப்புறுவது இரண்டுமே பெண்ணுக்கு வாழ்வு இல்லையென்றால் ஆணுக்கும் வாழ்வுமில்லை வளமுமில்லை. இதனை அறிஞர் சாள்ஸ் லெமிசில் பெண்களின் குறைபாடுகள் பலவற்றுக்கு ஆண்களே காரணம் எங்கள் மேலான குணங்களுக்கு பெண்களே காரணம் என ஆழ்ந்த கருத்தை முன்வைக்கின்றார். பெண்ணை குடும்பத்தின் ஓர் உறுப்பினராக மகளாக மனைவியாக தாயாக கருதியதேயன்றி தன்னளவில் உரிமைகளும் தனித்துவமும் கொண்ட உயிரியாக கருதவில்லை. மாறிவரும் சமுதாயத்தின் புதிய பரிமாணத்திற்கு ஏற்றாற்போல் அவர்களது வாழ்க்கைப் பாங்கையும் சமூகபடிநிலையையும் மாற்ற வேண்டாமா? சுpல பெண்கள் சட்டரீதியாகவும் அரசியல் அமைப்பின்படியும் சமத்துவத்தை பெற்றிருந்தாலும் பழைய சமூகமதிப்பு புதிய சமூகமதிப்பு என்பவற்றினிடையே மெல்லிய கயிற்றின் மேல் நடப்பது போல் தடுமாறிக் கொண்டேயிருக்கின்றனர்.

பாரதி நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம் என எள்ளி நகையாடியமை தமிழர் பண்பாட்டில் ஓர் புதிய குரலாக ஓங்கியொலித்தது. பழமைப் பண்பாட்டிற்கு எதிராகத் தோன்றிய புதுமைப்பெண் எதிர்ப்பண்பாட்டின் சின்னமாக காணப்பட்டது. ஆணிடம் மட்டுமேயிருந்த ஆதிக்க அம்சங்களை பெண்களும் பெற்றுக் கொள்ள எதிர்ப்பண்பாட்டுச் சிந்தனையும் செயற்பாடும் வழிசமைத்துக் கொடுத்தன. இதன் குரலாக சட்டங்கள் செய்வதும் பட்டங்கள் ஆள்வதும் பாரினில் பெண்கள் அன்றோ என்ற அசைவியக்கம் தமிழ்ச் சமூகத்திலும் மாற்றத்தை உண்டுபண்ணியது. எனினும் பெண்சுதந்திரம் பற்றி தமிழிலக்கியத்தில் எழுத்திலும் பேச்சிலும் மாற்றம் ஏற்பட்ட அளவுக்கு சமூக நடைமுறையில் ஜனநாயகப் பண்பாட்டு விருத்தியில் எத்தகைய சலனம் ஏற்படுத்தப்பட்டுள்ளதென்பது கேள்விக்குரியதே

பெண்ணினத்தின் முன்னேற்ற நாட்காட்டியில் 1975ஆம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் உலக நாடுகளின் பேரவை அவ்வாண்டினை அகில உலகப் பெண்கள் ஆண்டாக பிரகடனப்படுத்தியுள்ளது. மேலைநாடுகளிலே பெண்ணினம் கூடுதலான முன்னேற்றத்தை அடைந்துவிட்டது. எனினும் தமிழ் மகளிரிடையே முன்னேற்றம் சுதந்திரம் போன்ற பதங்களை பாவிப்பதில் கூட சுதந்திரமேற்படவில்லை. பெண் எழுச்சியினை ஏற்படுத்த உட்சுவர் நீத்திப் புறச்சுவர் நீத்தும் முறையில் உள மனச்சிக்கலை உடைக்க உழைக்க வேண்டும்.

பெண்ணும் ஆணும் இணைந்து பண்பாடு பாரம்பரியம் என்ற பெயரால் புதைக்கப்பட்ட பெண்ணினம் தலை நிமிர்ந்து தன்னம்பிக்கையோடு சமூகக் கொடுமைகளை எதிர்க்க அணிதிரளும் காலமிது வாழ்வின் மதிப்பீடுகள் வேகமாக மாறி வருகின்ற நேரமிது. மாற்றத்தைக் கண்டு அஞ்சாமல் புதியதைப் போற்றும் போது ஆக்கமே உருவாகும். அதேசமயம் பழமையின் சாரமுள்ள பாரம்பரியம் கெடாமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியமானதாகும். கண்ணகியின் காற்சிலம்பு மட்டுமா நியாயம் கேட்பது? காவியம் பாடிற்று? வாழ்வின் மதிப்பீடுகள் மாற்றம் பெறும் இக்காலத்துப் புதுயுகப் பெண்கள் அணியும் ஒவ்வொரு அணிகலனும் ஒரு சரித்திரம் பேசட்டும்! காவியம் இசைக்கட்டும்!