Wednesday, January 4, 2012

குப்பைக் காடு நடுவே பூத்து நிற்கும் குடியிருப்பு…

சிங்காரச் சென்னை இந்திய நாட்டின் ஒரு பகுதி! இங்கு பல வர்க்க மக்கள் வசிக்கின்றார்கள் தினம் தினம் விமானத்தில் பறந்து கொண்டு இருப்பவர்கள் இங்கு தான் இருக்கின்றார்கள். விமானத்தை அருகே பார்த்தவனும் இங்கு தான் இருக்கின்றான். பணக்காரன் மென்மேலும் செல்வம் சேர்த்துக் கொண்டிருக்க ஏழை கணத்திற்கு கணம் வறுமைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றான். இச் சென்னையில் சேரிப்புறங்கள் நிறைந்து இருக்கின்றன. சேறும் சகதியுமான இப்பகுதியில் ஒன்றான பம்பிங்ரேசன் பகுதியைப் பற்றிப் பார்ப்போம்.





மழை தன் வேலையை சிறப்பாகச் செய்திருந்தது அக்குடியிருப்பில்! இரண்டு பேர் நிற்கக் கூடிய அளவு தான் அக்குடியிருப்பின் பாதை. அந்தப் பாதையின் இருமருங்கிலும்  சிறு குச்சு வீடுகள் நிறைந்திருக்கின்றன.


நான்கு சுவர்கள் ஒரு வீடு என்றால் நம்பத் தான் வேண்டும். அதுவும் எப்போதோ கட்டப்பட்டு தூர்ந்து போன நிலையிலுள்ளது. சில வீடுகள் அரசால் கட்டப்பட்டு வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அந்த நிலங்கள் அம்மக்களது சொந்த நிலமில்லை. எந்த நேரத்திலும் நிலமின்றி அனாதைகளாக்கப்படும் நிலைமை தான் அங்கு காணப்படுகின்றது.




வழியெங்கும் குடங்கள் ஆக்கிரமித்திருக்கின்றன. அருகே சலவைத் தொழிலாளி துணிகளை துவைப்பதற்கு வைத்தது போன்று ஆடைகள் குவிந்திருக்கின்றன. வீட்டுப் பெண்மணிகள் வீட்டுக்கு முன் வைத்தே ஆடைகளை துவைக்கின்றனர். அருகே கொசுக்கள் நர்த்தனமாடுகின்றன. ஒரு வயது முதிர்ந்த பெண் தன் பேரனை தூக்கி வைத்திருக்கின்றார். ‘‘இவனை தூக்கிட்டு போங்கோ. எங்காவது கொண்டு போய் நல்லா வளருங்கோ. இங்க இருந்து இவனும் எங்களைப் போல கொசுத் தொல்லையால கஷ்ரப்பட வேணாம்’’ என்று கண்களில் வழிந்த கண்ணீர்த் துளிகளை துடைத்து விட்டவாறு சொன்னார். 




பத்துப் பதினைந்து வருடங்களாக ஒரு இடத்தில் குப்பைக்காடு பூத்துக் கிடக்கின்றது. அந்த இடத்திற்கு பின்னால் கல்யாண மண்டபமொன்று பாழடைந்த நிலையில் இருக்கின்றது. அந்தக் குப்பைகளை மாநகர சபையிடம் சொல்லிக் கூட அகற்ற முடியவில்லை. அந்த இடத்தில் வீடுகளை கட்டித் தருவதாக அரசு வாக்குறுதி கொடுத்திருப்பதாக அக்குடியிருப்புவாசிகள் கூறுகின்றனர். குப்பை நாற்றத்தினை நுகர்ந்து கொண்டு தான் தினமும் கண் விழிக்கின்றனர் இம்மக்கள். 


இங்கு பள்ளிக்கூட வாசம் பெரும்பாலும் எட்டு ஒன்பது ஆண்டுகளுடனேயே நின்று விடுகின்றது. பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பி விடுகிறார்கள். சில மாணவர்கள் ஆ.யு பட்டப்படிப்பு முடித்து விட்டு வேலைக்கும் போகின்றார்கள். இந்த மாற்றம் இங்கு வாழும் மக்களிடையே வரவேற்கத்தக்க மாற்றமென்று தான் சொல்ல வேண்டும்.


குடிசைகளிடையே மக்களோடு மக்களாக மாரியம்மனும் குடிகொண்டிருக்கிறாள். அவளும் அந்தச் சிறிய இடத்தில் அந்த மக்களின் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்வதற்காகத் தானோ அங்கிருக்கிறாள் எனத் தெரியவில்லை. ‘தூணிலும் இருப்பார் கடவுள் என்று சொல்வது இது தானோ’!


பம்பிங் ரேசனில் குடியிருக்கும் குமார் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசி தேவாலயத்தில் பாஸ்ரராக இருக்கின்றார். ‘‘இங்குள்ள மக்கள் பெரும்பாலும் கூலி வேலையைத் தான் செய்து பிழைக்கின்றார்கள். அன்றாடங் காய்ச்சிகளாக இருக்கும் அவர்கள் மெரினா கடற்கரையை அண்டிய பகுதிகளிலேயே வேலை பார்க்கிறார்கள். தங்கட வேலையை செய்து விட்டு அங்கேயே படுத்து உறங்கி விடுவார்கள். காலையில எழும்பி திருப்பவும் அதே வேலை என்டு அவங்கட பொழுது கழியும்’’ என இங்குள்ள மக்களது வாழ்க்கை முறையை கூறுகிறார். 


ஆண்கள் தத்தமது வேலைகளை பார்க்க வெளியெ சென்று விட வீட்டில் பெண்கள் சமையலைத் தவிர வேறு வேலையில்லாது இருக்கின்றார்கள். ஆனால் பெரும்பாலும் எல்லோர் கைகளிலும் கைத்தொலைபேசிகள் இருக்கின்றன. இவர்களது பொழுது தொலைக்காட்சியுடனே கழிகின்றது. அதிலும் மக்கள் தொலைக்காட்சியையே விரும்பிப் பார்ப்பதாக ராசலட்சுமி என்பவர் கூறுகிறார். அந்த தொலைக்காட்சியிலேயே தமிழை சுத்தமாக கதைக்கின்றார்கள். பிள்ளைகளுக்கும் அதைப் பார்த்தே கற்றுக் கொடுக்கின்றார்கள்.


குடியிருப்பில் ஒரு வீட்டில் சுமார் பத்துப் பன்னிரண்டு பேர் கூட்டாக வாழ்கின்றனர். மாமனார், மாமியார், கணவன், மனைவி, பிள்ளைகள் என கூட்டுக் குடும்பமாக வாழும் போது சின்னப் பிள்ளைகளது மனங்களில் தாக்கங்கள் ஏற்படும் வாய்ப்புண்டு. இங்கு முந்நூற்றைம்பது குடும்பங்கள் வாழ்கின்றனர். அதில் கிட்டத்தட்ட மூவாயிரம் மக்கள் வசிக்கின்றார்கள்.
துவைத்த ஆடைகளை கூரைகளிலேயே காயவிடுகின்றார்கள். காயப் போடுவதற்கு அதைவிட சிறந்த இடமில்லை. 


வெயில் காலத்தில் கூரைகள் ஆடைகளுக்கு கொடியாக இருக்க மழை காலத்தில் அந்தக் ஆடைகளே கூரைகளுக்கு பாதுகாப்பாக இருக்கின்றன. 

No comments:

Post a Comment