Monday, March 28, 2011

செல்வ ஆக்கங்கள்

The children of heaven
சொர்க்கத்தின் குழந்தைகள். ஈரானிய மொழியில் குறுந்திரைப்படமொன்றை அண்மையில் பார்த்து பாதித்த படம். அலி, சிவோத் எனும் அண்ணன், தங்கை. ஏழைக்குடும்பம்! தங்கையின் சப்பாத்தை அலி தைக்கக் கொடுத்து விட்டு வரும் போது அதனை தொலைத்து விடுகிறான்.
பெற்றோருக்குச் சொல்ல பயம். எனவே சிவோத் முதலில் சப்பாத்தை பாடசாலைக்கு போட்டுக் கொண்டு போய் விட்டு ஓரிடத்தில் நின்று அலியிடம் கொடுக்க அவனும் அதையே போட்டுக் கொண்டு பாடசாலை சென்று வருகிறான். என்ன ஒரு பாசம் என்று தான் வியக்க வைக்கிறது.
அதிலும் தங்கையுடன் சவர்க்கார நுரையில் குமிழி விட்டு விளையாடும் அலி பக்கத்து வீட்டுப் பையன் புட்போல் விளையாட அழைக்கும் போது மறுப்பதை என்னவென்று சொல்ல முடியும்!
தினமும் அலி நேரம் பிந்திச் செல்வதை ஹெட் மாஸ்ரர் பார்த்து மறுநாள் தந்தையை அழைத்து வரச் சொல்ல அப்பா இந்நேரம் வேலையில் இருப்பார். அவரால் வர முடியாது எனும் போது அலி பளிச்! வகுப்பாசிரியரின் சிபாரிசினால் தப்புகின்றான்.
சிவோத் தன்சப்பாத்தினை மற்றப் பிள்ளைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அவளது தொலைந்த சப்பாத்து தென்படுகிறது. அதைப் போட்டிருந்த மாணவியின் வீட்டைக் கண்டுபிடித்து அலியுடன் கேட்கப் போகும் போது அந்தப் பெண்ணின் குடும்ப சூழலை இருவரும் உணர்ந்து கேட்காமலே திரும்பி வருகிறனர்.
அலிக்கு பாடசாலையில் ஓட்டப்போட்டி. அதில் ஓடுவதற்கு அவனுக்கு விருப்பமிருந்தும் சப்பாத்து சரியில்லாத நிலை! என்றாலும் கூட மாஸ்ரரிடம் தன்னையும் இணைத்துக் கொள்ளக் கேட்கிறான். அவரும் அலியை தனியே ஓட வைத்து கணக்கிடுகிறார். ஓட்டப்போட்டியில் கலந்து கொள்கிறான் அலி.
அந்தப் போட்டியில் மூன்றாவதாக வருபவருக்கு சப்பாத்து ஒரு ஜோடி பரிசாகக் கிடைக்கும் எனவே ஓடும் போது தான் மூன்றாவதாக வர வேண்டும் என அவன் எடுக்கும் முயற்சி நிஜமாகவே திகைப்பைத் தான் ஏற்படுத்துகிறது. எனினும் எனக்குள்ளே ஓர் பரபரப்பு அவன் முதலாவதாக வர வேண்டுமென்று! அலி தான் பெஸ்ட். இதில் முக்கியமாக குறிப்பிடத்தக்க வேண்டியது என்னவென்றால் படம் பார்த்துக் கொண்டிருந்த அத்தனைபேருமே கைதட்டியது தான். அவ்வளவு உத்வேகம். ஆனால் அலிக்கு....?
மெடல். பதக்கம். பாராட்டு. கௌரவிப்பு.... இத்தனை கிடைத்தும் அவன் முகத்தில் சந்தோசமில்லை. பரிசுகளை பெறும் போதும் புகைப்படம் எடுக்கும் போதும் அழுதழுதே நிற்கிறான். அவன் எதிர்பார்த்து வந்த மூன்றாமிடம் கிடைக்கவில்லை. எனவே சப்பாத்தும் இல்லை. அவனுக்கு வெற்றி பெற்ற சந்தோசமே இல்லை. வீட்டுக்குப் போனதும் தங்கை கேட்ட கேள்விக்குப் பதி;ல் இல்லை. இல்லை இல்லை...எதுவும் இல்லை. கால்கள் புண்ணாகி வெந்த நிலை: சப்பாத்து வெடித்த நிலை. படம் முடிவடைந்தது. (தந்தை புதிதாக சப்பாத்து வாங்கி வருகிறார் அது வேறு விசயம்) ஆனால் ஒரு சிறுவனினதும் சிறுமியினதும் ஏக்கம்...ஆதங்கம்... எதிர்பார்ப்பு? இவர்கள் சொர்க்கத்தின் குழந்தைகள்???


No comments:

Post a Comment