Thursday, August 2, 2012

ஈழத்தமிழருக்காக கர்நாடக மாநிலத்திலும் ஒரு குரல்



இலங்கையில் இப்போது யுத்தக்களரி முடிந்தும் உண்மையில் சமாதானம் நிலவுவதாக சொல்ல முடியாது. இப்போதும் தினம் தினம் என்ன நடக்குமோ என்று மக்கள் அச்சவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். கடத்தல்களும் சிறுவர் துஸ்பிரயோகங்களும் அதிகளவில் நடக்கின்றன. பாதிக்கப்படுகின்ற மக்களுக்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் உரிமைக்குரல் எழும்பிக் கொண்டு தானிருக்கின்றன. அதிலும் தமிழர்களுக்காக உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள் தமது குரல்களை எழுப்பியபடியே  இருக்கின்றார்கள்.



ஊடகத்துறையை எனது வாழ்வுத் தொழிலாக தெரிவு செய்திருக்கும் நான் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தில் இதழியல் கற்கைநெறியினை தேர்ந்தெடுத்து முழுநேரமாக பயின்று கொண்டிருக்கின்றேன். எமது ஊடகப் பயணத்தில் இந்தியா செல்லும் வாய்ப்பு கடந்த மாதம் கிட்டியது. அப்பயணத்தின் போது ஊடகம் சம்பந்தமாக பல இடங்களிலும் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தோம். அப்போது பெங்களுரிற்கும் செல்ல முடிந்தது.

பெங்களுரில் கன்னட மொழி பேசுபவர்கள் அதிகம் வாழ்ந்தாலும் தமிழர்களும் ஆங்காங்கே வாழ்கிறார்கள். அங்கு வாழும் தமிழர்களுள் பெரும்பான்மையானோர் ‘பெமல் தமிழ்ச் சங்க’ உறுப்பினர்களாகி பல்வேறு வேலைகளையும் பணிகளையும் செய்து கொண்டிருக்கின்றார்கள். தமிழையும் கற்பித்துக் கொடுக்கின்றார்கள். தமிழர் சார்ந்த பணிகளுக்கு முன்னுரிமை வழங்குவதே அவர்களது கடமையாக இருக்கிறது.

பெமல் தமிழ்ச் சங்கத்தினர் ஈழத்தமிழர் பிரச்சினைக்காக ‘தமிழ்ச் சங்கம்’ அமைப்பினூடாக குரல் கொடுத்து வருகின்றார்கள். பேரணி, ஊர்வலம் எனப் பல வடிவங்களில் போராட்டங்களை நடாத்தி ஈழமக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை இந்த அமைப்பு மேற்கொண்டு வந்திருக்கின்றது.

இந்திய மக்கள் சார்பில் பிரதிநிதியாக சிலர் குரல் கொடுக்கிறார்கள். பேரணிகளை நடாத்தி உண்ணாவிரதம் கூட இருந்திருக்கிறார்கள். அதற்கும் ஒரு படி மேலாக எங்கோ முகம் தெரியாமல் இருக்கும் தமிழர்களுக்காக ‘தமிழன்’ என்ற உணர்வில் தீக்குளித்து தற்கொலை செய்திருக்கின்றார்கள். தமிழர் வாழம் இடங்களைத் தவிர வேறு பல இடங்களிலும்  இருந்தும் எதிர்ப்புக்குரல் எழும்பி இருக்கின்றது. பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி, இணையம் போன்ற ஊடகங்கள் வாயிலாக இந்திய மக்கள் ஈழப் பிரச்சினை பற்றி எவ்வாறு புரிந்து வைத்திருக்கின்றார்கள் என்பதை அறிந்த கொள்ள முடிந்தது.

இந்தியர்களது மனநிலை இவ்வாறான உணர்வுபூர்மானதொரு நிலையில் இருக்கின்றது என இலங்கை வாhழ் மக்கள் நினைத்துக் கொண்டிருந்தால் இங்குள்ள பெரும்பாலான மக்கள் ஈழப்பிரச்சினை பற்றி அறவே அறிந்திருக்கவில்லை என்கின்றார் பெமல் தமிழ்ச் சங்கத் தலைவர் மீனாட்சி சுந்தரம்.

‘‘இந்திய மக்களுக்கு ஈழத்தமிழர் பற்றிய உண்மை நிலை தெரிந்திருக்கவில்லை. தமிழ் மக்களிலேயே பலர் இந்தப் பல வருட போராட்டம் பற்றி அறிந்திருக்கவில்லை. சரி மக்களுக்குத் தான் தெரியவில்லையே ஆட்சி நடாத்துபவர்களுக்குமா தெரியாது என்றால் நம்பத் தான் வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கனிடம் ஈழப்பிரச்சினை பற்றி கதைக்கப் போன போது அந்தப் பிரச்சினை பற்றிய அரிச்சுவடி கூட அவர்களுக்கு தெரியவில்லை. இது எமக்குக் குறையாக இருந்தது’’ என்று மனவருத்தத்துடன் அவர் கூறினார்.

ஈழமக்களது பிரச்சினைகளது உண்மைநிலையை வெளியுலகிற்கு எடுத்துரைக்கும் நோக்கில் ஈழம் பற்றிய வெய்திகளை ஆங்கிலத்தில் தொகுத்து புத்தகமாக இச்சங்கத்தினர் வெளியிட்டிருக்கின்றனர். ‘Ethnic cleansing of Tamils in srilanka’ என்ற புத்தகம் ஜேர்மனியில் அறிமுகம் செய்து வெளியிடப்பட்டது. அதன்பின் சென்னையிலும் நூலறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இந்தப் புத்தகத்தின் அட்டைப்படத்தில் புத்தரின் கண்களில் இருந்து இரத்தம் வழிவதாக காட்டப்பட்டிருக்கின்றது. முதல் அட்டையே இப்புத்தகத்தின் கருவை வெளிப்படுத்தி நிற்கின்றது.

தமிழ்ச் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இப்புத்தகம் உலகெங்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளனர். ஈழப்பிரச்சினையின் உண்மைநிலை இப்புத்தகத்தின் மூலமாக இந்திய மக்கள் அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தாலும் அனைத்து மக்களுக்கும் அது சென்றடையுமா என்பது கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தமிழ்ச் சங்கத்தினர் அங்குள்ள மக்களிடம் கையொப்பங்களை திரட்டி ஜக்கிய நாடுகள் சபையிடம் அனுப்பி வைத்திருக்கின்றனர். யுத்தச்சூழல் முடிவிற்கு வந்துள்ள இன்றைய காலப்பகுதியில் கூட ஈழத்தமிழர்களுக்கான தீர்விற்காக குரல் எழுப்பி வருகின்றனர் என்றால் உண்மையிலேயே வரவேற்கத்தக்கது தான். அதுதவிர கடந்த மாதம் டெல்லியில் நடந்த ஈழத்தமிழருக்கான போராட்டத்திலும் இச்சங்கம் தனது பங்களிப்பை வழங்கியிருக்கின்றது.

தமிழகத்தில் தற்போது பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் ராஜீவ்காந்தி கொலைவழக்கிலும் தமது மூக்கினை நுளைத்திருக்கின்றது இந்த தமிழ்ச் சங்கம். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தூக்குத் தண்டனைக் கைதிகளான முருகன்இ சாந்தன்இ பேரறிவாளன் ஆகிய மூவரிற்காகவும் தமிழக அரசிடம் குரல் எழுப்பியுள்ளனர். அதற்காக தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.

ஈழமக்களுக்காக குரல் எழுப்பி அதனை இன்று வரைக்கும் செயற்படுத்தி வருகின்றது பெமல் தமிழ்ச் சங்கம். இச் சங்கம் கடந்த அறுபது ஆண்டுகளாக செயற்பட்டு வருகின்றது. இங்கு தமிழ் கற்பித்துக் கொடுப்பது மட்டுமல்லாது அங்கு வாழுகின்ற மக்களது உரிமைகளைப் பாதுகாப்பதிலும் அக்கறையாக செயற்படுகின்றது.

எல்லா மாநிலங்களிலும் எல்லோருக்கும் உரிமைகள் அளிக்கப்படுவதில்லை. அதிலும் தமிழர்களுக்கான உரிமைகள் மற்றவர்களுக்கு இருப்பதை விட இந்த கர்நாடக மாநிலத்திலும் குறைவாகத் தானிருக்கின்றது. எனினும் தமிழர்களுக்கான அடையாளத்தை எந்தத் காலத்திலும் விட்டு விடக் கூடாது என்ற நோக்குடன் இச் சங்கம் செயலாற்றி வருகின்றது. இந்த நிலைமை உலகத்தில எங்கும் இருக்கிறது தான்!

பெங்களுர் பெமல் தமிழ்ச் சங்கம் போன்று உலகில் எத்தனையோ இடங்களில் ஈழப் பிரச்சினைக்காக தமது குரலை ஓங்க வைத்துக் கொண்டிருப்பார்கள். இந்த இடங்களை எல்லாம் பார்ப்பதற்கு எவராலும் முடியாது தான். எனினும் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு சங்கத்தைக் கண்டு அங்குள்ள உறுப்பினர்களில் சிலரது கருத்துக்களை கேட்டது அங்குள்ள நிலைமையை அறிவதற்கு துணையாக இருந்தது.

இவ்வாறான பயணங்கள் தான் பிற மக்களது உணர்வுகளை அறிவதற்கு ஏதுவாக அமைகின்றன. அவர்கள் வாயிலாகவே அங்குள்ள மனநிலையை அறிந்து கொள்ள முடிந்தது. ஒவ்வொரு பயணமும் ஒருவனுக்கு அனுபவத்தை மட்டுமல்ல யதார்த்தத்தை, உண்மைநிலையை படம் பிடித்துக் காட்டுகின்றன.

மு.கௌசிகா
ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையம்

No comments:

Post a Comment