Thursday, August 2, 2012

எம் உலகிற்குள் யார் வருவீர்...!


சிறுவர்களது எண்ணங்கள், செய்கைகள் அவர்களுக்கு மட்டும் தான் சொந்தமானவை. தூர நின்று அவற்றை ரசித்து விட மட்டும் தான் எங்களால் முடியும். அதற்குள்ளே நுழைந்து பார்க்க சிறுவர்கள் அல்லவா அனுமதி கொடுக்க வேண்டும்.




ஒரு சிறுமியைக் கூப்பிட்டு, ‘‘உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும்; என்று சொல்லு. வாங்கித் தருகிறேன்’’ என்று பவ்வியமாகக் கேட்டால் கூட சொல்ல மாட்டேன் என அடம்பிடிக்கும். அவர்களின் எண்ணத்தினை வாய் மூலமாக கேட்பது கடினம். ஆனால் அவர்கள் கீறும் சித்திரங்களின் மூலம் உணர்ந்து கொள்வது இலகு.

‘சிறுவர்கள்’ எவ்வாறு தம் உலகைப் பார்க்கின்றார்கள்’ என்பது பற்றிய ஓர் செயற்திட்டமானது மேற்கொள்ளப்பட்டது. இது நடந்தது தென்மராட்சி யாஃமறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலத்தில்!

சிறுவர்கள்(தரம் 3,4,5) தாமே புகைப்படங்களினை எடுத்து அதன்மேல் சித்திரங்களை வரைந்துள்ளார்கள். அதனூடாக தமது எண்ணங்களை வெளிப்படுத்தி இருக்கின்றார்கள்.

சுவிஸ் நாட்டைச் சேர்ந்த பண்பாட்டுப் படைப்பாளியும் புகைப்படக் கலைஞருமான ஜோய்ல் சமெஸ், SDC (swiss development  cooperation) யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையம், நுண்கலைப்பீட சித்திரமும் வடிவமைப்பும் மாணவர்கள்  என பலரது கூட்டிணைவின் மூலம் இச்செயற்திட்டம் செயற்படுத்தப்பட்டது.
‘எனது உலகு’ எனும் தொனிப்பொருளில் அமைந்த கண்காட்சி இறுதி மூன்று நாட்களில் நடாத்தப்பட்டது.
 மறவன்புலோ வித்தியாலயத்தில் நடந்த கண்காட்சியில்,  பங்குபற்றிய மாணவனின் தாயார் தவராணி குகனேஸ்வரன் கருத்துக் கூறுகையில், “இது எமது கிராமத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம். எல்லோருக்கும் நன்றி சொல்லணும். இக்கிராமம் வெளியுலகத்தொடர்பு துண்டிக்கப்பட்டது. செய்திகள் பார்க்கிறேல்லை. பேப்பரும் எடுக்கிறதுக்கு வசதியில்லை. பின்தள்ளப்பட்டவர்களே இருக்கிறார்கள். இந்த மாணவர்கள் கமராவை முன்பு பார்த்திருக்கலாம். இப்போது அதை அனுபவித்திருக்கின்றார்கள்” என்றார்.

இக்கிராமத்தின் மாதர் சங்கத்தலைவி சிவராசா சுப்புலட்சுமி(வயது 57), “இது போன்ற கண்காட்சிகள் எமது பிள்ளைகளுக்கு தேவை. பாடசாலை மாணவர்களுக்கு மட்டுமல்லாது கிராம மக்களுக்கும் ஒளி தேவை” என்றார்.

ஊடக வளங்கள் பயிற்சி மையத்தில் நடந்த கண்காட்சியைப் பார்வையிட வந்த மக்கள், “சின்னஞ்சிறுவர்களா இப்படியெல்லாம் செய்திருக்கின்றார்கள்” என ஆச்சரியப்பட்டார்கள். செயற்திட்டம் நடைபெறும் போது பதிவு செய்த வீடியோக் காட்சிகள் அவர்களது ஆச்சரியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தன.

‘‘ஜந்தாம் ஆண்டுக்குட்பட்ட பிள்ளைகளின் வெறும் படப்பிடிப்பாக இக்கண்காட்சியினை நோக்க முடியவில்லை. இதனுடாக அவர்களின் ஆசை, ஏக்கம் என்பன தென்படுகின்றது. நாட்டின் அபிவிருத்தியை பற்றிப்பேசும் இவ்வேளையில் அபிவிருத்தி பற்றி இம்மாணவர்களின் ஆழ்மன எண்ணப்பாடுகளை அறிந்து அதற்கேற்ற சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளாhர்கள்’’ என்றார் நா.கு. மகிழ்ச்சிகரன்

புன்னாலைக்கட்டுவனில் இருந்து வந்த எஸ்.றமணன் இவ்வாறு கூறுகின்றார். ‘‘இந்தக் கண்காட்சியுடன் இந்தச் சிறார்களின் எண்ணங்களில் சிறகு விரிப்புக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கமல் அவர்களது எதிர்காலத்தை நல்லதாக ஏற்படுத்த வேண்டும்.

“சிதைந்து போன பிஞ்சுகளது உள்ளங்களில் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையையும் கற்பனையையும் ஏற்படுத்தியுள்ளது இக்கண்காட்சி” என்றார் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் செ.கஜேந்திரன் .

யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் (தரம் 05) தே.அபிராம் ‘இந்தக் கண்காட்சியில் முற்றுப் பெறாத விடயங்களை புகைப்படத்தில் முழுமையாகவும் கருத்துள்ளதாகவும் வரைந்துள்ளனர்’ ஏனக் கூறுகின்றார்.

‘‘புகைப்படங்களுடாகவும் ஆக்கங்களுடாகவும் மாணவர்களது எண்ணங்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. ஒரே தடவையில் இரு வகையான விடயங்கள் அதாவது அப்பிரதேசத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி செயற்பாடுகளை மாணவர் மனங்களுடாக வெளிக்கொணர்ந்து சிறப்பாகும்’’ என யாழ்.பல்கழைக்கழக மாணவி எ.பிரியதர்சினி கூறினார்.

கண்காட்சிக்கு வந்த ஆர்வலர்கள் பல்வேறான கருத்துக்களை சொன்னபோதும் அவர்களது ஒரே விருப்பு சிறுவர்களது எதிர்பார்ப்புக்கள் நிறைவேற வேண்டும் என்பதே!

சிதைக்கப்பட்ட ஆசைகளுக்கு சிறகு முளைக்க விட்டிருக்கின்றாhர்கள். இந்தச் சிறுவர்கள் எனவேதான் சிதைவுத்துவரங்களை வர்ணங் கொண்டு அடைக்க முற்பட்டிருக்கின்றார்கள். அபிவிருத்திக்களும் எதிர்பார்ப்புகளும் வர்ணமாகுவது எப்போது?

மு.கௌசிகா
MRTC

No comments:

Post a Comment