Friday, August 3, 2012

மாறுபட்ட கருத்துக்களில் மாநகரசபை ஊழியர்கள்


யாழ் மாநகரசபை பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளில் துப்பரவுப் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு எவ்விதமான பாதுகாப்புக் கருவிகளும் வழங்கப்படவில்லை என ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். காலை ஆறு மணிக்கு ஆரம்பிக்கிறது இவர்களது பணி. எட்டு மணித்தியாலம் வரை தொடர்கிறது வேலை.


வாகனப்புகையும் வீதியோரத்துத் தூசியும் நாற்றமும்; நாசியைத் துளைக்க தம் பணியை செய்கிறார்கள் துப்பரவுப் பணியாளர்கள்.

 சிறு வண்டியில் குப்பைகளை  அள்ளும் வேலையில் ஈடுபடும் ஊழியர் பூபாலசிங்கம் சொல்கிறார். ‘‘கைக்கு கிளவுஸ் தந்திச்சினம். ஆனால் அது கைக்கு போடேலாது பெரிய கிளவுஸ். போட்டால் மடமடப்பாயிருக்கும். வேலையும் செய்யேலாது. அதனால அதை போடுறேல்ல. வேற ஒன்று தரச் சொல்லி மாநகரசபையிடம் கேட்டனாங்கள். தாறம் என்டு சொல்லிச்சினம். இன்னும் தறேல்லை’’                

 ‘‘அடிப்படைச் சம்பளம் 14400/Jஅது வருடத்துக்கு வருடம் 131 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. அதை வைத்துக் கொண்டு ஏழு பேர் இருக்கிற குடும்பத்தில் சீவனம் செய்ய  முடியுமா?’’ என்கிறார்.

வீதி கூட்டும் பணி செய்யும் முருகம்மா இது குறித்து கூறுகையில் ‘‘கான் வேலை செய்யும் ஆண்களுக்கு மட்டும் தான் கிளவுஸ் குடுத்திச்சினம். ஏங்களுக்கு தரேல்லை. மாதத்திற்கு மூன்று சவர்க்காரம் தருகினம். நாங்கள் றோட்டுக் கூட்டிப் போட்டு உடம்பு கழுவவும் முடியாது. ஆம்பிளையளுக்கு பரவாயில்லை; அவங்கள் எங்கயாவது நின்டு கழுவிப் போடுவினம். நாங்கள் இந்த சாறியை சுத்திக் கொண்டு எட்டு மணித்தியாலமா நின்டு கூட்டணும். அதற்கு மேலே போடுறதுக்கு அங்கியொன்றும் தரேல்லை’’ என்றார்.

இவர் இவ்வாறு கூற ‘‘நான் இந்த வேலைக்கு வந்து பதினைஞ்சு வருசமாச்சுது. ஒருக்காலும் உந்த பாதுகாப்பிற்கான கருவிகள் தரேல்லை. கூட்டும் போது தூசியெல்லாம் வந்து மூக்குக்குள்ள தானே போகுது. மூக்குக்கு கட்டுறதுக்கும் கவசமொன்று கட்டாயம் தர வேணும். தலைக்கு தொப்பியும் இல்லை. இதால எனக்கு வருத்தம். ஆஸ்துமா நோய் வந்திருக்கு. என்ன செய்யுறது! வீட்டில் ஆறு பேரை வைச்சுக் கொண்டு வேலையையும் விடேலாது. ஏன்ர மனுசனுக்கும் பிறசர். அவர் வேலைக்கும் போறேல்லை. 17000/Jஎடுக்கிறனான். அதுவும் இப்ப லோன் எடுத்ததால 5000/Jதான் எடுக்க முடியுது’’ என்கிறார் செபஸ்ரியம்மா.

கிளவுஸ், கம்பூஸ்(சப்பாத்து), மூக்கை மறைக்கும் கவசம், உடலை பாதகாக்கும் அங்கி, தலைக்கவசம் என்பனவே இவ்ஊழியர்களின் சொத்து. இச்சொத்து இல்லாத நிலையிலேயே துப்பரவு வேலையில் ஈடுபடும் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இவற்றை ஒருபோதும் தமக்கு வழங்கவில்லை என ஒரு சாரார் மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு புறமாக சில ஊழியர்கள் அப்படியில்லை எல்லா பாதுகாப்பு சாதனங்களும் வழங்கப்பட்டன என்று சொல்கிறார்கள்.

யாழ் நகரப் பகுதியில் வாய்க்கால் வேலை செய்யும் ஒரு ஊழியர் ‘‘எங்களுக்கு கம்ப+ஸ் தந்தவை. கிளவுசும் தந்தவை. அது தந்ததே நல்லம். ஆனாலும் வேலை செய்யேக்கே வாற நாற்றத்தையும் மறைச்சுக் கொண்டு தான் வேலை செய்யனும். மூக்கை மறைக்கிறதுக்குஏதாவது தந்திச்சினம் என்டால் இன்னும் நல்லம்’’ என்கிறார்.

யாழ் நகர பொதுச் சுகாதார பணிமனையின் தொழிலாளர்களுக்குரிய தலைமைத் தொழிலாளி இந்திரராசா இப்படிக் கூறுகிறார். ‘‘இங்கு ஒரு பிரச்சினையும் இல்லை. ஒருத்தருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. எல்லாம் எங்களுக்கும் தந்திருக்கினம்’’

சுகாதார பணிமனை அலுவலக அதிகாரி இது குறித்து தெரிவிக்கையில் ‘‘இங்கு எட்டு மணித்தியாலம் இறுக்கமாக வேலை
நடைமுறைப்படுத்தப்படுகிறது. இது பஜார் ஒன்று. சில சில ஏரியாக்களில் வேறுபாடு இருக்கிறது தான். இப்ப இவர்களில் சிலர் சொன்னது மாதிரி ஒன்றையும் கொடுக்காமல் இல்லை. வேலைக்கு ஒழுங்காக வாறதில்லை. அதால அவர்களின்ர உடல் பாதுகாப்பு அங்கி கையுறை எல்லாம் இங்க இருக்குது. வேலைக்கு ஒழுங்காய் வாறவைக்குத் தான் குடுத்திருக்கிறோம். குடுத்தாலும் இவங்கள் போடுறேல்லை. எங்களைத் தான் குற்றம் சாட்டுவினம்’’ என்றார்.
இப்படி இரு பக்கமாக கருத்தக்கள் கூறப்படுகிறது. சம்பளப் பிரச்சினை குறித்தும் கேட்ட போது தமக்கான ஊழியம் இது தானே இதை விட மேலதிகமாக எதிர்பார்க்கவேலாது என்று ஒரு சில ஊழியர்கள் கூறுகின்றார்கள். இல்லை இல்லை வாழ்க்கைச் செலவு அதிகரித்துக் கொண்டு செல்லும் போது சம்பளத்தையும் அதிகரிக்க வேண்டும் என மற்றொhரு சாரார் தெரிவிக்கின்றனர். இழுபறியிலேயே இவர்களது வேலை சாதனங்களும் இவர்களது பேச்சுக்களும் செல்கின்றன.

ஓவ்வொரு ஆண்டும் 131ரூபா சம்பள அதிகரிப்பு. அதுவும் ஒரு வரையறைக்கு மேல் வழங்கப்படுவதில்லை. ஓய்வூதியத்திற்காக 250ரூபா சம்பளப் பணத்தில் பிடிக்கப்படுகிறது. இவர்களுக்கு 77000/j வரை கடன் வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஜந்து வருடத்திற்கு மட்டுமே கடன் வசதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வருடத்தில் 45 நாட்கள் தான் வேலை விடுப்பு வழங்கப்படுகிறது. அது போதாமல் இருக்கிறது என்று தாமாகவே விடுப்பு எடுக்க வேண்டியிருப்பதாக ஊழியர்கள் கூறுகிறார்கள்.

ஊழியர்களுக்கான பாதுகாப்பு கருவிகள் வழங்கப்படும் நிலை இழுபறியில் செல்கிறது. ஒருபுறம் சம்பளப் பிரச்சினை. இதற்கிடையில் தமக்கு வேலை செய்ய வழங்கப்படும் உபகரணங்கள் சீரில்லை என்கிறார்கள். புற்றைகளை செதுக்கவே முடியாத கூர்மையற்றுப் போன முள்ளுவிறாண்டி. அதை வைத்து எவ்வளவு நேரம் வேகாத வெயிலில் வேலை செய்ய முடியும் என்று ஆதங்கப்படுகிறார் ஜம்பது வயதைத் தாண்டிய ஒரு ஊழியர்.

இதற்கிடையில் என்ன தான் செய்தாலும் பொதுமக்களிடம் ஏச்சுக்களையும் கேட்டபடியே தான் நகர்கிறது இவர்களது வேலை. நகரை சுத்தப்படுத்தும் பணி செய்பவர்கள் துப்பரவுப் பணியாளர்கள். அவர்களிற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். அப்போதே ஒழுங்காக தமது தொழிலை மேற்கொள்ள முடியும்.

பாதுகாப்புக் கருவிகள், வேலை செய்யும் உபகரணங்கள் என்பன சீரானதாக வழங்கப்பட வேண்டும். ஒருத்தரையொருத்தர் குற்றம் சாட்டிக் கொள்வதனால் எந்த வேலையும் நடக்காது என்பது பலர் அறிந்ததே!

M.gowcega
MRTC

1 comment:

  1. Vanakkam Sahothari,
    www.oorpakkam.come matrum tamils.com enum valaya thalangalil, ungal pathivukalum vara vendum endru aasai padukiren. Mudinthaal, info@tamils.com enum muhavarikku thodarpu kolla mudiyuma, minanchalil?

    ReplyDelete