Friday, November 11, 2011

வேதனையாகிப் போன அனுபவம்...

சேதி சொல்லும் பேனாக்கள் (தென்னிந்தியப் பயணப்பதிவு)





இந்தியா
எம் ஊடகப் பயணத்திற்காக
தெரிவு செய்த நாடு!


சென்னை மாநகரத்தில் ஆரம்பமானது
எம் பயணம்…








அந்நியர் கால அபிவிருத்தி
என்றும் நன்மை தந்திருக்கின்றன
வெண் நதிகளில் படகுகளில் படையெடுப்பு வந்தான் வெள்ளைக்காரன்
அது அந்தக் காலம்
கருங்கூவத்தில் இலையான் படையெடுப்பு நடத்துவது இந்தக் காலம்!

சிங்காரச் சென்னை
சிறகு முளைத்த பறவையாக
எங்கும் புதுமை பூத்து நிற்கின்றது!

மாடிக் கட்டிடங்களும் அதீதமான மோட்டார்வண்டிகளும்
வீதியை ஆக்கிரமிப்புச் செய்திருந்தன
சென்னைத்தமிழ் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன...

மெரினா கடற்கரை வீதி
தன் இருமருங்கிலும்
தழிழ் அறிஞர்களது சிலைகளை பிரசவித்திருந்தது...!
கண்களுக்குப் பசுமையூட்ட புற்தரைகள்…
புற்களுக்கு குளுமையூட்ட  நீர்ப்பம்பிகள்… 

ஆ! வீதியே இந்தப் பரிமாணம் எடுத்திருந்தால்
வீடுகளில்
குறைப்பிரவசம் எதுவுமே இல்லையோ என
பார்த்த கணம்
எண்ணத் தோன்றியது!


கடற்கரைக்குச் சென்றால்
கால் நனைக்காது திரும்பி விட
எவரும் ஆசை கொள்வதில்லை...

புலர்ந்த காலைப்பொழுது
மணியோ ஆறு!
நடைப்பயிற்சி சிறந்த உடற்பயிற்சி



ஆதவக்கதிர்கள் பொன்நிறம் பூசி
ஒளியூட்ட ஆயத்தம் செய்து கொண்டிருந்த தருணம்...

ஆங்காங்கே விழிப்புத் தட்டாமல்
கடற்கரை மண்ணிலேயே
உறங்கிக் கொண்டிருந்தன
மனிதர் கூட்டம்...

காலைக்காட்சி பார்க்க
சென்ற எமக்கு
காலைக்கடன் கழித்த காட்சி
கண்முன்னே விரிந்தது!
அந்தப் பரந்து விரிந்த மாபெரும்
கடற்கரையில்
ஒதுக்குப்குறமாக ஒதுக்கப்பட்ட
ஒதுங்கி ஒதுங்கியே
பழகிய மக்கள் வாழ்வு கழிகின்றது...

எம்நாட்டில்
யுத்தக் களரிக்குள் இருந்து வெளிவந்த
புனர்வாழ்வு மக்கள் நான்கு தறப்பாள்களுக்குள் வாழ்க்கை நடாத்துகின்றார்கள்...

இந்தியா நாட்டிலோ
வானமே கூரையாக
நாய்களின் கழிவுகள்
காற்றாட வருபவர்களின் எச்சில் துப்பல்கள் அருகே
படுத்துறங்கும் மனித இனம்!

கடற்கரையோரமாக
கச்சான் கொட்டில்களாக அவர்கள் குடிசைகள் உப்பு நீரில்
வாய் கொப்பளித்து
நீராடிக் கழித்து
கழிவுகளை அகற்றுவது
எல்லாம் அந்த கடல் அன்னையிடம் தான்...

மாலையில் பெற்றோருடன்
விளையாட வரும் சிறுவர்கள்
நொறுக்குத்தீனி வாங்குவது
தம்மையொத்த வயதுச் சிறுவர்களிடமே!

கோடையில் குளுகுளு தென்றலிடம் கதை பேசியபடி
நிலா முற்றத்தில்
உறங்குவது சுகம்
அதே சுகம் மாரியிலும்
நீடிக்க முடியுமா….?

சின்னச் சின்னதாய் மழைத்துளிகள்
வந்து விழுகின்றது
உடலிலும் மண்ணிலுமாய்…
மேலே படிந்த மழைத்தூறல்களை
அள்ளியெடுத்து அருகே கொட்டுகின்றான்
அசாதாரணமாக…!
கீழே நனையாமல் இருந்த
மணற்துகள்களில் படுத்துறங்குகின்றான்
நனைந்த மணற்பரப்பில் உறங்க
அவ்வளவு ஆசையோ!

கண்ணால் பார்த்து
காதலால் கேட்டு
மூக்கினால் சுவாசித்து
உணர்ந்து கொண்ட
வேதனை மிக்க அனுபவம்!

தமிழ் வளர்த்த பெரியார்களது சிலை நகரைப் பார்த்தபடி இருந்தது
நகர சந்தடியால் கடலோசையும்
கடற்கரை அவலச்சத்தமும்
கேட்கவில்லையோ என்னவோ...!
கேட்டு
அநீதி கண்டு பொங்கியதாலேயோ
கடலும் பொங்கி
சுனாமியாக உருவெடுத்தது...?

பயணங்கள் முடிவதில்லை
தொடர்ந்தது பயணம்......

தமிழ் வேந்தன் பெயரில் ஒரு நகர் முளைத்து நிற்கின்றது
நெடுஞ்செழியன் நகர்
கூவத்தின் மணத்தோடு தொடங்குகின்றது
அந்த நலிவுற்ற நகர்…

சுற்றிலும் கழிவுநீர் வடிகால்களே
நெடுஞ்செழியனுக்கு
அகழிப் பாதுகாப்பு வழங்குகின்றன...



இலையான்களும் கொசுக்களும் நுளம்புகளும்
தம்மைச் சுத்த வீரர்களாக எண்ணி
மனித எதிரிகளை பந்தாடிக் கொண்டிருக்கின்றன               
இனம் தெரியாத வைரஸ்களை
தம் படைக்காக
ஆட்சேர்த்துக் கொண்டிருக்கின்றன...

கோடையில் ஆடைக்கு பாதுகாப்பு கூரை
மாரியில் கூரைக்கு பாதுகாப்பு ஆடை

எம் குளியலறை மலசலகூடம்
இந்த நகரின் வீடுகளை விட விஸ்தாரமானவை...

அழுக்கான ஆடைகள் கிழிந்து தொங்குகின்றன
ஆடைகளுக்குள்ளே சின்னஞ்சிறார்கள்…
பாடசாலை மறந்து தெருவிலே நடமாடுகின்றனர்

நான்கு சுவர்கள் ஒரு வீடு
உள்ளே கூட்டுக் குடும்ப வாழ்க்கை
ஏழு எட்டு என்று எண்ண முடியாது தொடர்கின்றது
அங்கத்தவர் எண்ணிக்கை...

ரகசியமான தாம்பத்தியம்
சிறார்களின் முன்னே விரிகின்றது
தான் தோன்றித்தனமாக வளர இடம்கொடுக்கின்றது
இவர்கள் கூட்டுக் குடும்ப வாழ்வு!

இளவயது திருமணம் தலைவிரித்தாடுகின்றது
மனம் திருமணத்தில் மட்டும்
முதிர்ச்சி காட்ட
விளைகின்றது திருமண உறவு
பதினெட்டு வயதிலேயே சச்சரவு வெடிக்க
குழந்தை பிறக்கும் வயதிற்க முன்னரேயே
விவாகரத்து பிறந்து விடுகின்றது!

கைவிடப்பட்ட மனைவிமார் சங்கம் உருவாகுவதற்கு
தயாராகி வருவது போன்று
பெண்கள் பலர்
கணவனால் ஓரங்கட்டப்பட்டு
விதியை நொந்த கொண்டிருக்கின்றார்கள்...

இருபுறமும் வீடுகள்
ஒருங்கே இருவர் நடந்தால்
இடி தான் சன்மானம்!

கூவத்தின் அருகே குடியிருப்பு
குடியிருப்புக்களின் ஒர் பகுதியில்
பாயா உணவுற்பத்தி களைகட்டுகின்றது!



ஆடுகள் முழங்காலோடு முடமாக்கப்படுகின்றன
வெட்டி எடுத்த கால்கள்
சுடுநீரினை குடித்து
நெருப்பில் வதங்கி
வெயிலின் தாகம் தீர்க்க
வெறும் மண்ணில் உலருகின்றன...





கிருமி நீக்க சுடுநீர்
கிருமி தொற்ற கூவம் மண்

அனாதராவான பெண்களின் வாழ்க்கை
பாயா உற்பத்தியில் உயர
எம்பிக் குதிக்க முடியாமல்
எழும்பி நடக்க முடியாமல்
மந்தைக் கூட்டம்…!

வைரசுகளும் இலையான்களும்
காவலின்றி
உட்சென்று ஆட்டம் போட
மனிதக்குடல்
பாதுகாப்பற்ற அரசாகி
புறமுதுகோடுகின்றது

இது தான் பாயா……!

உயர் ரக உணவகங்களில்
உயர் செல்வந்தர்
பாயா உணவினை விரும்புகின்றனர்
அதைச் செய்பவர்கள் இந்த சேரிப்புறத்தினர்

குடிக்க நீர் இல்லை
கழிப்பிடம் இல்லை
கல்வியறிவு இல்லை
குடித்தனம் செய்ய சீரான வாழ்விடம் இல்லை
என்று தீரும் வேதனை
என்று மறையும் வேதனைத்தடம்……!

சொந்த மக்கள் நிலையோ
நொந்த  நிலை…

இவர்கள் இலங்கைக்கு வீட்டுத்திட்ட அன்பளிப்புச் செய்கிறார்கள்…!

3 comments:

  1. கவிதை சிறப்பாக உள்ளது கெளசி....
    மேன்மை கொள் சைவ நீதி என்று உலகுக்கு உணர்த்திய எமது தாய் தமிழ் நாடு இந்திய நாடு.
    இமயத்தில் புலிக்கொடி பொறித்த சோழ வம்ச கரிகாலனை தனது வயிற்றில் சுமந்த மண் இந்திய மண்
    கங்கை முதல் கடாரம் ஊடாக ஈழத்தையும் தன் ஒரு குடைக்குள் கொண்டுவந்த ராஜா ராஜன் தோன்றிய மண் இந்திய மண்
    முறம் கொண்டு புலி விரட்டியும், தன் மகன் கோழை என்றால் பாலூட்டிய மார்பையே கொய்வேன் என்று சப்தமிட்ட வீர பெண்கள் உதித்த மண் இந்திய மண்
    பாரத தாயின் வயிற்றை கிழிக்க ஆயுதம் கொண்டு அந்நியன் புகுந்தபோது வீர வாள் கொண்டு சபதம் எடுத்து போரிட்ட கட்ட பொம்மன் வாழ்ந்த மண் இந்திய மண்
    நாட்டுக்காக தம் உயிரையே துச்சமாக நினைத்த வீரர்கள் புரண்ட மண் இந்திய மண்
    அன்றும் குடும்ப ஆட்சி தான் செய்தான் அவன் அது நாட்டுக்காக அரசர் செய்த ஆட்சி
    இன்று அது தமது வீட்டுக்காக அசுரர் செய்யும் ஆட்சி
    குடும்பத்து சொத்து கணக்கு பர்ரகவே நேரம் இல்லாத வேளையில் மக்களின் துன்பம் துடைக்கவா நேரம் ஒதுக்க போகின்றார்கள்
    தன் சொந்த மாநிலம் காஸ்மீரில் பெண்களையும் குழந்தைகளையும் பலி எடுக்கும் இந்த தேசமா எம் இனத்தின் துயர் துடைக்கும்....?

    ReplyDelete
  2. நன்றிகள்...
    கிருஸ்ணர் கல்கி அவதாரத்தில் உலகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வருவார் என்கின்றனர். அப்படி கடவுள் அவதாரம் எடுத்து வந்தாலும் இந்தக் காலத்தில் யார் தான் நம்புவார்களோ தெரியவில்லை.

    ஆனால் இளைய தலைமுறையினருக்கு ஒரு வெறி வரவேண்டும். எம் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று வெறி வளர வேண்டும்.

    ஆனாலும் இதைப் பற்றி கதைத்துக் கொண்டிருக்கும் நாம் கூட வெறும் வார்த்தைகளோடு விட்டுவிடவும் முடியும்.

    யதார்த்த வாழ்வில் அதைச் செயலாற்ற முதலில் பழக வேண்டுமல்லவா?

    ReplyDelete