Tuesday, June 19, 2012

எனது உலகு-(எண்ணங்கள் வழியே எழுந்த எதிர்பார்ப்புக்கள்)


முன்பள்ளி, ஆரம்பப் பாடசாலைகள் வழியாகச் சென்றாலே மழலைகளின் சங்கீத மொழிக்காக நெஞ்சத்தை பறக்க விட கால்கள் கெஞ்சும். அவர்களுடனேயே சேர்ந்து சுற்றும் வாய்ப்புக் கிடைத்தால் எப்படி இருக்கும்? நாம் காற்றாகி வானில் பறந்து விட மாட்டோமா!



சிறுவர்களது உலகம் மிகப் பரந்துபட்டது. அந்த உலகிற்குள் வெறுமனே நுழைந்து விட முடியாது. அவர்களுடன் நாமும் இணைந்துவிட வேண்டும்.
‘சிறுவர்கள் எவ்வாறு தம் உலகைப் பார்க்கின்றார்கள்’ என்பதனை வெளிப்படுத்தும் விதமாக ‘எனது உலகு’ எனும் செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.


ஒரு வாரகால இச்செயற்திட்டத்திற்காக சுவிஸ் நாட்டின் புகைப்படக்கலைஞர் ஜோய்ல் சமெஸ், SDCநிறுவனத்துடன் (Swiss Development Coopration) இணைந்திருந்தார். தனது திட்டத்தை செயற்படுத்துவதற்காக சிறுவர்களைத் தேடினார். யா/மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலய தரம் 3,4,5 மாணவர்களை இணைத்தார். ஆளனிப்பலத்திற்காக யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையம், நுண்கலைப்பீட சித்திரமும் வடிவமைப்பும் மாணவர்களுன் கைகோர்த்தார். 

சிறுவர்களிடம் உங்களுக்கு என்ன பிடிக்கும் என்றால் “அம்மா,அப்பா சாக்லேட் பிடிக்கும்” என்பார்கள். வேறு என்ன தேவை எனக் கேட்டால் சொல்வார்களா? ஒரு இடத்தில் நின்று பதில் தான் வருமா? அதனால் தான் ஜோய்ல் சமெஸ் ஒரு திட்டத்தை வைத்திருந்தார். சிறுவர்களிடம் கமராவைக் கொடுத்து அவர்கள் கையினாலேயே புகைப்படம் எடுக்க வேண்டும்.



தாம் எடுத்த படங்களில் என்னவெல்லாம் இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறார்களோ அவற்றை அப்புகைப்படங்களின் மேல் கீற வேண்டும். அப்பொது சிறுவர்களின் எண்ணங்களில் என்ன ஒளிந்திருக்கிறதோ அவற்றை வெளிக்கொண்டு வரலாம் என்பது அவரது புது வியூகம். இந்த வியூகத்ததை ஆப்கானிஸ்தானில் உள்ள பாடசாலை மாணவர்களிடையே செயற்படுத்தி வெற்றியும் கண்டிருக்கின்றார்.


கடந்த மாதம்(09.05.2012) பெரியவர்கள் நாம் ‘சிறுவர் உலகிற்குள்’ நுழைந்தோம். 29சிறுவர்களை ஊடக மாணவர்களின் நேரடிப் பயிற்சிக் கண்காணிப்பில் விடப்பட்டனர். ஓவ்வொரு மூன்று சிறுவர்களுக்கும் ஒரு கமரா பயிற்றுநர். 
சிறுவயதில் திருமண வீடுகளில் எம் கண்கள் கமராவையே மொய்த்தபடி இருக்கும். எம் கைகளிலும் கமரா வராதா என்கின்ற ஏக்கத்தோடு இருப்போம். அந்தச் சிறுவர்களும் அப்படித்தான் ஏக்கத்துடன் பார்த்தபடி இருந்தார்கள். அவர்களுள் 13பேர் மட்டுமே கமராவைப் பார்த்திருக்கிறார்கள்.
கமரா பற்றிய விளக்கம் தரப்பட தாமாகவே படம் எடுக்கத் தொடங்கினார்கள். இருவர் ஆர்வமில்லை என்றபோதும் படம் எடுத்தார்கள்.

அடுத்தநாள் எமக்குள் ஒரு கலக்கம். இச்செயற்திட்டம் வெற்றி பெறுமா என்கின்ற கேள்வி இருந்தது. ஆனால் ஆர்வமாக காத்திருந்து தமக்குரிய பயிற்றுநர்களை தேடிப் போய் தாமாகவே கமராவைப் பறித்து படம் எடுத்த ஆர்வம் எம் கேள்விக்கான விடையைக் கூறியது.

ஆளுக்கு மூன்று படங்கள் வீதம் தெரிவு செய்யப்பட்டன. படத்தில்  குறையிருந்தால் தான் அதன்மேல் வரைந்து அதனை பூர்த்தி செய்யலாம். அப்போது தான் சிறுவர் எண்ணத்தில் இருப்பது வெளிப்படும். ஆரம்பத்தில் தடுமாறினாலும் இது இது என தம் படங்களினை தெரிவு செய்தார்கள்.
மறுநாள் புகைப்படங்கள் பெரியளவில் படங்களாக அவர்கள் கையில் வழங்கப்பட்டன. படங்களின் மேல் சித்திரங்களை வரைய வேண்டும்.  மேற்பார்வைக்காக வந்திருந்த நுண்கலைப்பீட மாணவர்கள் இருபதுபேரும், சிறுவர்கள் படம் எடுத்தார்கள் என்பதை நம்பத் தயாரில்லை. ஆதற்கானக கற்பூரத்தை கையில் கொளுத்தியா காட்ட முடியும்!

சிறுவர்களின் முன்னே வர்ணப்பெட்டிகள். வரையச் சொல்ல முன்பே செயலில் இறங்கினார்கள். வரைந்ததும் எதையோ சாதித்து விட்ட பெருமை அவர்கள் முகத்தில்!

சிறுவர்களின் எண்ணங்களில் வெளிப்பட்ட சித்திரங்கள் அவர்களது கிராமத்திலேயே நுண்கலைப்பீட மாணவர்களால் வரையப்பட்டன. பஸ், கோவில், வீடு என இடிபாடடைந்த சுவர்களின் மீது சித்திரமாகின.

அவர்கள் பாடசாலையில் கண்காட்சி நடத்தப்பட பெற்றோருக்கும் ஏனைய மாணவர்களுக்கும் தமது படங்களை காட்டி மகிழ்ந்தனர். ஊடக வளங்கள் பயிற்சி மையத்தில் இருநாட்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கண்காட்சின் முதல்நாள் பங்குபற்றிய சிறுவர்கள் வந்திருந்தனர். தும் பாடசாலையைத் தவிர வேறோர் இடத்திலும் தமது படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்ற மகிழ்ச்சி அவர்கள் முகங்களில் தெரிந்தன.

சிறுவர்களது எண்ணங்கள் கமரா வழியாக, சித்திரங்கள் வழியாக வெளிப்பட்டிருக்கின்றன. ஏன்று தீரும் இவர்களது எதிர்பார்ப்புக்கள்...?


No comments:

Post a Comment